தமிழகத்தில் இன்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
வாணவேடிக்கைகள், புத்தாடைகள்,
இனிப்பு வகைகள் போன்றவற்றிற்கு பஞ்சமில்லை.
தீபாவளி தமிழர்கள் பண்டிகையா, நரகாசூரன் இருந்தானா,
தீபாவளி கட்டுக்கதை போன்று வலைப்பதிவுகளில் நண்பர்கள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அது போகட்டும். தீபாவளியை தமிழர்களாகிய நாம் ஏன் கொண்டாட வேண்டும்
என்பதை ரூம் போட்டு யோசித்ததில் கிடைத்த பதில் இதுதான். அதாவது,
ராஜபட்ச மனம் மாறி 3 லட்ச தமிழ் மக்களையும்
அவரவர்களுடைய சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி
தீபாவளிக்கு பரிசும் கொடுத்துக் கொடுத்து கைகள் சிவக்க நின்று கொண்டிருக்கிறார் என்று அங்கு காலியாகிவிட்ட முகாமுக்கு போடப்பட்டுள்ள வாட்ச்மேன் தகவல் தெரிவித்துள்ளார்.
இங்கே முல்லைப் பெரியார் அணையில் உச்சநீதிமன்ற
தீர்ப்பில் கூறப்பட்டுள்ள 142 அடிக்கும் மேலாக 160 அடி
தண்ணீர் தேக்கிக் கொள்ளலாம் என்றும், புதிய அணை
தேவையில்லை என்றும் கேரள முதல் மந்திரி அச்சுதானந் கூறிவிட்டார்.
சக இந்தியரின் மனம் நோகும்படி, அவர்கள் தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்று
இனி சொல்ல மாட்டோம் என்றும் காவிரியில் எங்களுக்கு குடிக்கத் தண்ணி இல்லாவிட்டாலும் தமிழ்நாட்டுக்கு கொடுப்போம் என்று கர்நாடக முதல் அமைச்சர் எடியூரப்பா சொல்லிபுட்டார்.
பாலாறு மட்டுமல்ல, மோர், தயிர், வெண்ணெய், நெய், டால்டா, மசகு, குரூடு என்று எந்த ஆறும் எங்களுக்கு வேண்டாம். அதில் அணை மட்டுமல்ல
அதில் நின்று சின்ன கோவணம் கூட கட்டமாட்டோம் என்று
ஆந்திரா முதல்வர் ரோசய்யா ரோஷத்துடன் சொல்லிவிட்டார். எல்லாம் தமிழருக்காக....கலைஞருக்காக.
டி.ஆர்.பாலு, திருமா, கனிமொழி அன்ட் கோ சொன்ன தகவலைக் கேட்டு
இந்தியாவின் அனைத்து மாநில மக்களும் அழிந்து போன/ அழிந்து கொண்டிருக்கும் ஈழத் தமிழருக்காய் கண்ணீர் விட்டு கதறி மிகவும் சோகமாக உள்ளனர் .
ஆந்திரா, கர்நாடகா, கேரளா எனறு எல்லா மாநில மக்களும் தமிழருக்கு பேருதவிகள் நெறய்யயயயய செய்யத் துவங்கிவிட்டார்கள்.
அதனால் நாமும் அவர்களது பண்டிகையை வெட்கமில்லாமல் கொண்டாடுவோம்.