Monday, June 29, 2009

வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன?.



கும்பாபிஷேகம்
நாகர்கோவில் ரயிலில் கோவையிலிருந்து திருநெல்வேலிக்கு சோல்ல வேண்டி வந்தது, காலை நேரம் என்பதால் கோவையிலிருந்து ஈரோடு வரைக்கும் அலுவலகத்துக்கு செல்வோர் அளவுக்கு அதிகமாக இருந்தனால் கலகலப்பாக சென்றது. ஈரோட்டிலிருந்து ரயில் பயணம் பகலை தின்றுகொண்டிருந்தது. ரயில் பயணம் களைப்படையச் செய்தது. சிலர் தூங்கிவிட்டனர் சிலர் அன்றைய நாளிதழில் மூழ்கிவிட்டனர். பகல் 1 மணிóக்கு ரயில் திண்டுக்கல்லை அடைந்தது. அவரவர்கள் கொண்டுவந்த உணவையும், சிலர் ஸ்டேசனில் விற்றுக்கொண்டிருந்த உணவை வாங்கி உட்கொண்டனர். சில புதிய பயணிகள் ஏறினர். ரயில் சுறு சுறுப்பாக மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்து. அனைவரும் கலகலப்பாக பேசிக்கொண்டு, அன்றை உலக நடப்புகளை அலசிக்கொண்டிருந்தனர். திண்டுக்கல்லில் இரண்டு குருக்களும் ஏறி பயணம் செய்தனர். அவர்கள் பங்குக்கு நாட்டு நடப்பை அலசிக்கொண்டிருந்தனர். இராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகத்திற்கு சங்கராச்சாரியாரை அரசு சார்பில் அழைக்கவில்லை என்று குறைபட்டுக்கொண்டிருந்தனர். சங்கராச்சாரியாரை அழைக்கவில்லை என்பதை தேசக் குற்றம் என்பது போல் பேசிக்கொண்டிருந்தனர். பயணிகள் அனைவரின் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியிருந்தது. அது வரை சும்மாயிருந்த நான் முதன்முறையாக கும்பாபிஷேகம் என்றால் என்ன? என்று கேட்டேன்.

இப்பொழுது சுற்றியிருந்தவர்களின் ஒட்டு மொத்த பார்வையும் என் பக்கம் திரும்பியது. சின்ன அமைதி குருக்களின் பதிலுக்காக! ... . கும்பாபிஷோகம் என்றால் கோவிலுக்கு சக்தி ஏத்துவது. 12 வருடத்துக்கு ஒரு முறை கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். நாட்டு மக்கள் சுபிக்ஷமாக இருக்க வேண்டுமானால் நம் முன்னோர்கள் சொன்னதை நாம் கடைப்பிடிக்க வேண்டும். ஏன் எதுக்கு என்று கேட்கக்கூடாது என்று பொத்தாம் பொதுவாக கூறினார்.

நீங்கள் கூறியதற்கு எதிர் வாதம் செய்யலாமா? என்று குருக்களிடம் கேட்டேன். குருக்களின் பதிலை எதிர் பார்க்காமல் சுற்றியிருந்த அனைவரும் நீங்கள் கூறுங்கள் என்று சொன்னார்கள்.

நம்முடைய கோவில்கள் அனைத்தும் கிட்டத்தட்ட முதல் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதாவது 2000 வருடத்திற்கு முந்தியவை. நமது கோயில்கள் கோபுரங்களுடன் (Tower ) கட்டப்பட்டவை. இடி, மின்னல் கோபுரத்தை தாக்கும் பொழுது, கோபுரங்கள் இடிந்து விடுவதற்கும், சில நேரங்களில் தீ பிடிப்பதற்கும் அவகாசம் உள்ளது. இடி, மின்னல்களிலிருந்து காப்பதற்காக கோபுரங்களில் கும்பம் வைத்து கும்பத்தில் வரகு (இது ஒரு தானியம்) மற்றும் சில நவ தானியங்களை நிரப்பி காற்று புகாவண்ணம் வைத்துவிடுவார்கள். கும்பமும் அதில் உள்ள தானியங்களும் இடி தாங்கியாக செயல் பட்டு இடி மின்னல்களை நீர்த்துப் போகச் செய்துவிடுகிறது. கும்பம் மற்றும் அதில் உள்ள தானியங்கள் ஆயுள் 12 வருடங்கள் தான். 12 வருடங்களுக்கு பிறகு இடி மின்னலை தாங்கும் சக்தி இழந்து விடுகிறது. அதனால்தான் 12 வருடங்களுக்கு ஒரு முறை கண்டிப்பாக கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறி சென்றார்கள். கும்பாபிஷேகம் செய்யும்பொழுது கோவில் அனைத்தையும் மராமத்துப்பணிகள் செய்து கும்பம் மாற்றும் பொழுது கோவில் மற்றும் கோபுரம் இரண்டையும் பாதுகாப்பதுபோல் ஆயிற்று. இது தான் கும்பாபிஷேகம். இடி தாங்கி (lightnging conductor ) 17ம் நூற்றாண்டில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. நமது முன்னோர்கள் முதல் நூற்றாண்டிலேயே இடி தாங்கியை கண்டுபிடித்துவிட்டார்கள் என்பதுதான் சிறப்பு.

திருநெல்வேலிவரை வருகிறேன் என்று கூறிய குருக்கள் மதுரை ஸ்டேசனிலேயே இறங்கிவிட்டனர். வேறு ரயில் பெட்டியில் ஏறினார்களா என்று தெரியவில்லை. ஆக, நாங்களும் பல கோயிலுக்கு கும்பாபிஷேகம் செய்துள்ளதாக குருக்கள் கூறினார்கள். இப்படி பல பேர் ஏன் செய்கிறோம், எதற்கு செய்கிறோம், என்று தெரியாமலே நிறைய விசயங்கள் செய்கின்றனர்.

இப்பொழுது சொல்லுங்கள், கும்பாபிஷேகத்திற்கும், சங்கராச்சாரியாருக்கும், என்ன தொடர்பு. சங்கராச்சாரியார் கும்பாபிஷேகத்திற்கு வந்தால் என்ன?, வராவிட்டால் என்ன?.

அடுத்து குருக்களிடம் கலை நயம் என்ற பெயரில் கோயிலை சுற்றி மிகவும் கவர்ச்சியாக (ள்ங்ஷ்) யாக சிலை வைத்துள்ளார்கள் ஏன் என்று கேள்வி கேட்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால்........... .............

Tuesday, June 9, 2009

சுற்றுப்புற சூழல் தினமும், குளோபல் வாமிங்கும், அரசியல்வாதிகளும்........!?..!?.



உலகம் முழுவதும் பூமிப்பந்து வெப்பமடைவதைக்கண்டு உலகமே அஞ்சிக்கொண்டிருக்கும் நிலையில், நம்மூர் அரசியல்வாதிகளுக்கு மட்டும் அரசியல் செய்வதற்கு அதுவும் ஒரு நாளாக பயன்படுகிறது அவ்வளவுதான்.

அரசியல்வாதிகளின் பிறந்த நாள் மற்றும் கட்சியின் முக்கியமான நாட்களில் தன்னை சமூக சேவகனாக காட்டிக்கொள்வதற்கும், தனி நபர் மற்றும் கட்சி விளம்பரத்திற்காகவும், 5 ஆயிரம் மரகன்றுகள் நடுகின்றோம், 5 லட்சம் மரக் கன்றுகள் ஒரே நாளில் நடுகின்றோம், என்று பரபரப்புக்காக மரம் நடுவது போன்று பேப்பர்களில் படம் வருகிறது அவ்வளவுதான். உண்மையில் அத்தனை மரங்களும் நடப்படுகின்றனவா?, நடப்பட்ட மரக் கன்றுகள் கண்காணிக்கப்படுகின்றனவா? என்றால் இல்லை என்றுதான் கூறவேண்டும். பாமக வின் பசுமை தாயகம் சார்பில் பல லட்சம் மரங்கள் நடப்பட்டதாக செய்தி, மற்றும், கலைஞர் பிறந்த நாள் சார்பில் மரங்கள் நடப்பட்டன, ஈசா யோக மையத்தின் ( ஜக்கி வாசுதேவ்) சார்பில் பல லட்சம் மரம் நடப்பட்டதாக செய்தி, அத்தனை மரக்ன்றுகளும் உண்மையில் நடப்பட்டிருந்தால் தமிழ் நாடு சோலை வனமாகியிருக்கும். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

சுற்றுப்புற சூழலால் பூமி எவ்வாறு வெப்பமடைகிறது, ஒற்றைகரிம வாயுவின் (தொழிற்சாலைகளில் இருந்து வெளியாகும் கரிம வாயுகள்) எறிசிதைவினால் சுற்றுப்புற சூழல் சூடாகி பூமி பந்து வெப்பமடைகிறது.

வெப்பமடைவதைக்கண்டு ஏன் பயப்பட வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முன் இமய மலையின் உச்சி சிகரத்தின் புகைப்படத்தை பார்கும் பொழுது அடர்ந்த பனியால் போர்வை போர்த்திக்கொண்டு இருப்பது போல் அழகாக காணப்படுகிறது. ஆனால் தற்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பார்க்கும் பொழுது, முற்றிலும் பனி உருகி அணிகலன் அத்தனையும் இழந்த விதவையைப் போல் விகாரமாக காட்சி அளிக்கிறது. இதே நிலை நீடித்தால் ஆர்டிக் பகுதி முழுவதும் உருகி, ஒட்டு மொத்த மனித குலத்துக்கே (ஓசோன் படலம் பாதிப்பால் புற்று நோய், மற்றும் புதிய பதிய நோய்கள், மற்றும் பருவ நிலை மாற்றங்கள், மழை பொழிவு குறைவு, வெள்ளம், வறட்சி ) அழிவு உண்டாக்கும்.

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப தொழில் வளத்தைப் பெருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதே நேரத்தில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இயற்கை நமக்கு கொடையாக வழங்கியுள்ள மரம் செடிகளை நிறைய வளர்க்க வேண்டும். மரம் செடிகள் கரியமில வாயுவை கிரகித்துக்கொண்டு பிராண வாயுவை வெளியிடுகிறது. இதனால் சராசரி வெப்ப நிலை உயர்வு, சூழல் வெப்பநிலை உயர்வு போன்ற விரும்பத்தகாத விளைவுகளை கட்டுப்படுத்துகிறது, தாவரங்களின் சேவை நமக்கு தேவைப்படுகிறது. நமக்கு சொந்த வீடோ, வாடகை வீடாக இருக்கட்டும், நம் வீட்டை சுற்றி நம்மால் முடிந்த மரக்கன்றுகளை நடுவோம். ராமர் இலங்கைக்கு பாலம் கட்டும்பொழுது அணிலின் பங்கு எந்தஅளவுக்கு இருந்ததோ, அதே போல் சுற்றுப்புறப் பாதுகாப்புக்கு நம்மால் முடிந்த சின்ன பங்கு இருக்கட்டும்

Friday, June 5, 2009

உலக நாடுகளும், ஐ.நா.வும், புடலங்காயும்....!?!?




ஏய் வெங்காய கருப்பா, ஒன்னுமே புரியமாட்டேங்குது. வந்ததும் சரியில்லை, வாய்ச்சதும் சரியில்லை. நடந்ததும் சரியில்லை,நடந்துட்டு இருக்கிறதும் சரியில்லை. ஏன்னையா ஒரே புலம்பலா இருக்குது. என்னங்கிறத தெளிவா சொல்லி தொலையும். இலங்கையில் நடந்து முடிந்துள்ள போரும், அதற்கு அப்புறம் தொடர்ந்துகொண்டிருக்கும் அவலங்களும், .நா சபையும், சர்வதேச சமூகமும் வேடிக்கை பார்த்துட்டு வேதனைப்படுத்துகிறதே.

சோனமுத்து உனக்கு மண்டையில கொஞ்சம் கம்மினு நான் நினைக்கிறேன் . .நா.சபைங்கிறது பவர்புள்ளான சபை அது தலையிட்டால் பிரச்சனை சரியாகும்னு நினைக்கிறது தப்பு.

.நா. சபைங்கிறது இளிச்சவாய் நாடுகளை மிரட்டுவதற்கு வல்லரசு நாடுகள் பயன்டுத்தும் ஒரு சாதனம். வடகொரியாவை மிரட்ட வேண்டுமா? அமெரிக்கா ஏதாவது ஒரு நாட்டின் மீது படையெடுக்க வேண்டுமா? உடனே ஒப்புதல் தர .நா. தேவை அவ்வளவுதான். .நா.சபையில் பாலஸ்தீன மக்களுக்கு சுய நிர்ணய உரிமை தர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது வரை பிரச்சனை தீரவில்லை.
டேய் கருப்பா இலங்கை தமிழ் இன அழிப்பு கொள்கைக்கு இந்தியா இலங்கைக்கு ஏன் துணை போகிறது, ராஜதந்திர நடவடிக்கைகளா? அல்லது வெளியுறவுத் துறையில் உள்ள ஒரு சிலரின் தமிழ் விரோத மனப்பான்மையா?
சோன முத்து நீயும் நானும் தீர்கின்ற பிரச்சனை இல்லை இது. கலைஞர் ஐயாவுக்கு தான் நாம் 28 தொகுதிகளில் வெற்றிபெறச்சொய்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். தமிழர்கள் படு கொலைசெய்வதை தடுக்க தவறிவிட்டார். இருக்கின்ற தமிழர்களையாவது காப்பாற்றுவார் என நம்புவோம்.

அப்படியும் நடக்கவில்லை என்றால் என்னடா பன்னுவது. தமிழர்களின் விதியும், சர்வதேச சமூகத்தின் சதியும் நினைத்துகொண்டு தமிழர்கள் பிச்சனையை தமிழர்கள் தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Tuesday, June 2, 2009

அண்ணன் அழகிரிக்கு .......




புது டில்லியில் ரயிலை தவறவிட்ட பயணிகளை பத்திரமாக சென்னைக்கு திருப்பி அனுப்பினார். வட இந்திய பத்திரிக்கைகள் புகழாரம். நேற்றைய கலைஞர் டிவியில் செய்தி. அழகிரி அதிரடி ஆட்டம் ஆரம்பித்துவிட்டது. தமிழக இரயில்வேயில் ஏகப்பட்ட நிலுவை வேலைகள் (கேஜ் கன்வர்சன், மேம்பாலம் கட்டுதல், மின்மயமாக்கல்) பாக்கி இருக்கிறது. அந்த வேலைகள் எல்லாம் நன்றாக முடிக்க வேண்டுமானால் தமிழகத்துக்கு ரயில்வே மந்திரி வேண்டும். குறைந்தது இணை அமைச்சராவது வேண்டும். கலைஞர் எப்பாடுபட்டாவது தமிழக நலன் கருதி வாங்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்கள் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் கலைஞரால் குடும்பத்துக்கு யாரயாருக்கு என்ன வாங்குவது என்ற பிரச்சனையில் தமிழகத்தின் நலனை மறந்துவிட்டார். ரயில்வே இணை அமைச்சர் பதவி கேரளா தட்டிக்கொண்டு போய்விட்டது. இனி தமிழகத்தின் கதி அதோ கதிதான். முந்தய ஆட்சிகாலத்தில் பமக ரயில்வே இணை அமைச்சர்கள் மூர்த்தி, வேலு, ஆகியோரால்தான் தமிழகத்தில் ரயில்வேயில் குறிப்பிடத்தக்க சாதனை அடைந்து. அதில் மாற்றுக்கருத்து கிடையாது.

அழகிரி எந்தவித பொறுப்பும் இல்லாமல் தென் தமிழ் நாட்டை தன்னுடைய கண் அசைவில் வைத்திருந்தார். இப்பொழுது அண்ணன் அழகிரிக்கு கேபணட் மந்திரியாகிவிட்டார். இரயிலவே மினிஸ்டர் இல்லையென்றால் என்ன தமிழகத்தின் அத்தனை தேவைகளையும் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் நிறைவேற்றுவார். என்று அல்லக்கை, அடி வருடி, ஜிங்கிடி, ஆகியோர் சொல்லக்கூடாது. வாக்களித்த மக்கள் சொல்லவேண்டும், அண்ணன் ரெம்ப நல்லவர் என்று. கலைஞர் மேல் படிந்த கலங்கத்தை துடைத்து புண்ணியம் தேடிக்கொள்ளவார் என்று நம்புவோமாக. படித்த பமக வேலுவைக் காட்டிலும் படிக்காத மூர்த்தி நிறைய சாதித்தார் என்று கூறுவார்கள்.