Wednesday, April 29, 2009

பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது



தொடர்ந்து போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது என்று இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக 'த வீக்' ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.

பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவுடன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.

எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.

இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில் அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.

வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.

இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.

பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.

அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.

உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.

அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கரவாதிகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.

இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.

ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.

மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.

வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க
மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா? சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.

ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது 'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.

"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார் அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.

54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.

நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப் போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.

புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, April 27, 2009

பிரான்சின் தலைநகர் பாரிசில் பல்லாயிரக்கணக்கான மக்களின் அடங்காப்பற்றுப்பேரணி

பிரான்சின் தலைநகர் பாரிசில் தமிழர்களின் எழுர்ச்சிப்போராட்டம் 21வது நாளாக இன்றும் (26.04.2009 ) நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

தமிழினப்படுகொலைகளை நிறுத்தக்கோரியும், உடனடிப்போர்நிறுத்தத்தை வலியுறுத்தியும் இரவு பகல் தொடற்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் இப்போராட்டத்தில் நான்கு இளையோர்களின் உண்ணா நிலைப்போராட்டம் 19வது நாளாகத்தொடர்கின்றது.

நேற்றய நாள் பிரானசின் தலைநகர்பாரிசில் பேரெழுர்ச்சிகண்ட அடங்காப்பற்றுப்பேரணி சரியாக பி.ப. 2.30 மணிக்கு மனிதவுரிமைச்சதுக்கம் பகுதியிலிருந்து ஆரம்பமாகி பிரான்சின் ஈஃபில் கோபுரம் அமைந்துள்ள பிரதான வீதியூடாக நாடாளுமன்றவளாகம் நோக்கிச்சென்றடைந்து அங்கு சிறப்பு ஒன்று கூடல் நடைபெற்றது.

இதில் பல அரசியல் பிரமுகர்கள், சட்டவாளர்கள், மதப்பெரியவர்கள், பலவேறு அமைப்புக்களின் தலைவர்கள் கலந்துகொண்டு உடனடிப்போர் நிறுத்தம் ஏற்பாட வேண்டும், தமிழ்மக்களுக்கான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டும், தமிழ் மக்களின் ஏகப்பிரதி நிதிகள் விடுதலைப்புலிகள்தான் எனவும் கூறியதோடு, சர்வதேசத்தின் நிலைப்பாட மாற்றமடையக்கூடியதொன்று எனவும் தொடர்ந்து போராடினால் வெற்றிகடைக்கும் எனவும் தெரிவித்திருந்தனர்.

உண்ணாநிலையிருக்கும் இரண்டு இளைஞர்களும் உடல நிலை மிகவும் களைப்படைந்துள்ள நிலையில் மக்களோடு பேரணியாக மக்களின் உதவியோடு நாடாளுமன்றம் வரை சென்று அங்கு மக்களுக்கானதும், சர்வதேசசமூகத்திற்குமான உரையையும் நிகழ்த்தியிருந்தனர்.

சிறப்பு ஒன்றுகூடல் அங்கு நிறைவடைந்ததன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மீண்டும் பேரெழுர்ச்சியோடு மனிதவுரிமைச்சதுக்கத்தை வந்தடைந்து சிறப்பு ஒனறுகூடல் நடைபெற்றது. இதில் என்றுமில்லாதவாறு பிரெஞ்சு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துப்பதிவுசெய்தன. அத்துடன் இந்த அடங்காப்பற்றுப்பேரணியில் பதாகைகள் தாங்கியும்,கொட்டொலிகள் முழங்கியும் சுமார் 35000 ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்கொண்டனர்.

பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்குபற்றலோடு மிகவும் ஒழுக்கத்துடனும், பண்புடனும் நடைபெற்ற இப்போராட்டம் மகக்களின் கவனத்தை ஈர்த்ததோடு பிரான்சின் காவல்துறையினரும் ஏற்பாட்டளரகளுக்கு நன்றி தெரிவித்திருந்தனர்.

இன்றும் தொடற்சியாகப்போராட்டம் அதே பகுதில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எனவே மக்கள் தொடற்சியாக இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என உண்ணா விரதிகளும் ஏற்பாட்டாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர். அத்துடன் இன்று ஏற்கனவே உண்ணாநிலைப்போராட்டத்திலுள்ள இளைஞர்களோடு இணைந்து பிரான்சிலுள்ள அனைத்துத்தமிழ்ச்சங்கங்களும் அடையாள உண்ணா நிலைப்போராட்டத்தை காலை 6மணியிலிருந்து மேற்கொண்டுள்ளனர்

தனி ஈழம்தான் இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு: ஜெயலலிதா ஆவேசப் பேச்சு

இலங்கை பிரச்சனைக்கு தனி ஈழம்தான் நிரந்தர தீர்வு’’ என்று அதிமுக பொதுச்செயலாளர் செல்வி ஜெயலலிதா சேலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஆவேசமாக பேசினார்.

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சேலத்தில் மக்களவை தேர்தல் வேட்பாளர் செம்மலையை ஆதரித்து பேசினார்.

அவர் தொடர்ந்து பேசியதாவது:-

’இலங்கைக்கு நேரில் சென்று வந்து அங்கே ஈழத்தமிழர்களின் அவலங்களை கண்டு வந்திருக்கிறார் ’வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீரவிசங்கர்.

அவர் என்னைச்சந்தித்து ஈழத்தமிழர்களின் அவலங்கள் பற்றிய சி.டி.க்கள். போட்டோக்கள் கொடுத்தார். அதையெல்லாம் பார்த்தபோது நெஞ்சு கொதிக்கிறது.

தமிழர்களின் இந்த நிலை நீங்கவேண்டுமென்றால், இலங்கைத் தமிழர் பிரச்சினை முடிவுக்கு வரவேண்டுமென்றால் தனி ஈழம்தான் ஒரே தீர்வு.

அந்த தனி ஈழத்தை நாங்கள் போராடி பெற்றுத்தருவோம். இது நாள் வரை நான் தனி ஈழம்தான் தீர்வு என்று சொல்லைவில்லை. அரசியல் தீர்வு, அது இது என்று சொல்லிவந்தேன்.

ஆனால், இப்போது ஆணித்தரமாக சொல்கிறேன் தனி ஈழம்தான் இலங்கை பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு’’ என்று ஆவேசமாக பேசினார்.

பிரான்ஸ் உண்ணாவிரதிகளில் இருவர் மருத்துவப்பிரிவினரால் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளனர்

பிரான்ஸில் தொடர்ந்து 19 வது நாட்களாக சாகும் வரையிலான உண்ணாநிலைப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த நான்கு இளைஞர்களில் இருவரினுடைய உடல் நிலை மோசமடைந்ததின் காரணமாக அவசர வைத்தியப்பிரிவினரால் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


ஆனந்தகுமாரசாமி ரவிராஜ் மற்றும் விக்கினேஸ்வரன் வர்ணன் ஆகிய இரு இளைஞர்களுமே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஏனைய இரு இளைஞர்களும் தொடர்ந்தும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சிறிலங்காப் பேரினவாத அரசு தமிழ் மக்களின் மீது கொத்துக் குண்டுகளையும் நச்சுக் குண்டுகளையும் வீசிக் கொன்று குவித்து அவர்களின் பிணங்களில் நின்று கொண்டு தாண்டவம் ஆடுகின்றது.

இந்த நிலைமையிலே உலக நாடுகள் தோறும் அகிம்சைப் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிரான்சிலும் கடந்த 08.04.2009 அன்று புதன்கிழமையிலிருந்து உண்ணாநிலைப் போராட்டத்தை நான்கு இளைஞர்கள் ஆரம்பித்து தொடர்ந்து மேற்கொண்டுவந்தமை குறிப்பிடத்தக்கது.