எல்லை மீறினால் எல்லாம் துன்பம் தான்.
(முந்தய பதிவின் தொடர்ச்சி)
ஒத்த கருத்துள்ளவர்கள் தான் நண்பர்களாக இருக்கவேண்டும் என்று கட்டாயம் இல்லை. ஒத்துபோகாத கருத்துள்ளவர்கள் கூட நண்பர்களாக இருக்கலாம். நானும் நண்பர் ரகுவும் சமீபத்தில், கடந்த இரண்டு வருடங்களாக கோவை வன பகுதியில் யானைகள் கொல்லப்படுவதைப்பற்றி கவலையுடன் பேசிக்கொண்டிருக்கும்போது நண்பர் பாலா அவர்கள் வந்தார். (பாலா அவர்கள் பழகுவதற்கு இனிமையானவர். பல பேருக்கு வேலை கொடுப்பவர். இறை நம்பிக்கை உடையவர். )
அவசர உலகத்தில் மனிதர்கள் படும் பாடு சொல்லிமாளாது. விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பு இல்லாமை, நடுதர மக்கள் குழந்தைகளுக்கு கல்வி, மற்றும் சரியான மருத்துவ வசதி போன்றவை எட்டாக் கனியாக தான் உள்ளது. வாழ்க்கையே போராட்டமாகத்தான் உள்ளது. மனிதர்களைப் பற்றி நினைத்து ஏதாவது செய்ய முடியுமா? என்று பாருங்கள், யானையைப் பற்றி பிறகு சிந்திக்கலாம் என்று சர்வ சாதாரணமாக கூறிச் சென்றுவிட்டார்.
பாலாவின் கருத்து பாலாவின் கருத்தாகவே இருக்கட்டும். அதற்கு பதில் கூறத் தெரியவில்லை எனக்கு. என் கருத்தை மட்டும் நான் கூறுகிறேன்.
1. யானைகள் மக்களுடைய குடியிருப்பை நோக்கி வருகிறது, என்று கூறுவதற்கு பதில் நாம் தான் வனத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்.
2. மலை உசச்சியில் சமூக விரோத செயல்கள் கஞ்சா பயிரிடுவதாகவும், மற்றும் பல சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாவும், சமுக விரோதிகள்தான் யானையை வெடி வைத்து விரட்டுவதாகவும் உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன.
3. சுற்றுப்புற சூழல் (மரம் வெட்டி கடத்துவது, வன விலங்குகளை வேட்டையாடுவது, காட்டை அழிப்பது) போன்ற காரணங்களுக்காக யானைகள் உணவுக்காகவும், குடி நீருக்காகவும் கிராம நகரப் பகுதிகளுக்கு வருகின்றன.
மொத்தம் 700 சதுர கி. மீ. பரப்புள்ள கோவை வனக் கோட்டத்தில் மட்டும் 250 -300 யானைகள் வசிக்கின்றன. வேட்டையாடுதல், விபத்து, மின் வேலிகளில் சிக்கி உயிரிழப்பது போன்ற காரணங்களினால் ஆண் பெண் விகிதம் மிகவும் குறைந்து வருகிறது. 27 பெண் யானைகளுக்கு ஒரு ஆண் யானை தான் உள்ளன என்று யானை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதே நிலை நீடித்தால் யானையை அடுத்த சந்ததியினர் காட்சிப் பொருளாகத்தான் பார்க்க முடியும். வன விலங்குகளை வைத்துதான் ஒரு வனத்தின் வளமையை நிர்ணயிக்கப்படுகிறது. வன விலங்குகள் இல்லாத காடு அழிந்து விடும். காடு அழிந்தால் மழை குறைவு சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடைந்து மனிதன் நடைப்பிணமாகத்தான் வாழவேண்டியது வரும். வளமையான வாழ்வுக்கு வளமான காடு இன்றியமையாதது.
மனிதனால் உருவாக்க முடியாததும் அதிகபடுத்தமுடியாததும் நிலப்பரப்பும், எல்லையையும்தான். பெருகிவரும் மக்கள் தொகை காரணமாக விவசாயம் செய்ய, வீடு கட்ட என்று கூறிக்கொண்டு காட்டை நோக்கி ஓடுகிறோம். இவ்வாறு மாறி வரும் வாழ்க்கை சூழலுக் கேற்ப நமது வாழ்க்கை முறையினை இயற்கையோடு இணைந்து செயல்பட வேண்டும். அதற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது, (Real Estate) என்ற பெயரில் கட்டுபாடு இல்லாமல் நாட்டையும் காட்டையும் கூறு போட்டுக்கொண்டிருப்பவர்களை சட்ட திட்டங்களை முறைப்படுத்தி கட்டுக்குள் கொண்டு வரவேண்டும். மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும். (வளர்ந்த வசதியான நடுகள் அனைதிலும் மக்கள் குறைவாகவே உள்ளனர்.)
பாதுகாப்பு உத்தரவாதத்துடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கவேண்டும். கோவை போன்ற வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் தனி வீடு கட்ட தடை போடவேண்டும். (தனி வீடு கட்டிக்கொண்டே போனால் விளைநிலங்கள் அனைத்தும் விலைநிலங்களாக மாறி வரும் அவலம் ஏற்படுகிறது.) இவ்வாறு செய்வதனால் வன விலங்குகளை ஓரளவேனும் காப்பாற்றலாம்.
வனத்துறைக்கு முக்கிய பொறுப்புக்கு வருபவர்கள் வனம் மற்றும் வன விலங்குகளை பற்றிய அறிவும் வனத்தைப்பற்றிய அக்கறையும் ஆர்வமும் இல்லாததும், மற்றும் அரசியல்வாதிகளின் முழு ஒத்துழைப்பு இல்லாததும் தான் வனம் அழிவதற்கும், வன விலங்குகள் இறப்பதற்கும் முக்கியமான காரணம்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன், என்பதை தவறாக புரிந்து கொண்டு யானை இறப்பதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை? மனிதன் தன் தலையில் தானே மண்ணை போட்டுக்கொள்கிறான். இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் வாழ்க்கையே உன்னதமான வாழ்க்கை.
பாலாவின் கருத்து சரியா? தவறா?